மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: உதவி பேராசிரியருக்கு 53 ஆண்டு சிறை
கல்லூரி மாணவிகளை பாலியல் ரீதியில் துன்புறுத்திய வழக்கில் அரசு கல்லூரி உதவி பேராசிரியருக்கு 53 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு.;
கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் ரீதியில் துன்புறுத்தி குற்றத்துக்கு 53 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட உதவி பேராசிரியர்.
கரூர் தான்தோன்றிமலையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பொருளாதாரத் துறையில் உதவிப் பேராசிரியராக பணி புரிந்தவர் இளங்கோவன். கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி தீபா என்ற மாணவி கல்லூரியில் படிக்கும் சக மாணவிகளை உதவி பேராசிரியர் இளங்கோவன் பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து உதவி பேராசிரியர் இளங்கோவனை கைது செய்தனர்.
இளங்கோவன் மீது பெண்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தியது, தீண்டாமை வன்கொடுமை, பொது இடத்தில் அவமானப்படுத்துவது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிந்தனர். இது தொடர்பான வழக்கு கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணையில் ஐந்து மாணவிகளை உதவி பேராசிரியர் இளங்கோவன் பாலியல் ரீதியில் துன்புறுத்தியது நிரூபனமானது. 5 மாணவிகளுக்கும், தலா 5 பிரிவுகளில் பதியப்பட்ட வழக்குகளில் தனித்தனியாக தண்டனை விதித்து மொத்தம் 53 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, மாவட்ட அமர்வு நீதிபதி கிறிஸ்டோபர் தீர்ப்பளித்தார். தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் அவர் உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட 5 மாணவிகளுக்கும் தலா 5 லட்சம் நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்தார்.