பெட்ரோல் விலை கூடிப்போச்சு! பைக்கை தள்ளி வந்து வேட்பு மனு
பெட்ரோல் விலை அதிகரிப்பை வலியுறுத்தி ம.நீ.ம வேட்பாளர் பைக்கை தள்ளி வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இன்று பெட்ரோல் விலை வாசி உயர்வை கண்டித்து பைக்கை தள்ளி வந்து நூதனமாக வேட்புமனுவை தாக்கல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் முகமது ஹனீப் சஹீல் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று அவர் தனது வேட்பு மனுவை அரவக்குறிச்சி தாசில்தார் அலுவலகத்தில் தாக்கல் செய்ய திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் பிற்பகல் 2 மணி அளவில் வேட்புமனு தாக்கல் செய்ய தனது ஆதரவாளர்களுடன் பைக்கை தள்ளிக் கொண்டு வந்தார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் பெட்ரோல் விலை வாசி உயர்வை கண்டித்தும் விலைவாசி உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருப்பதை உணர்த்தும் வகையில் பைக்கை தள்ளிக் கொண்டே வேட்புமனு தாக்கல் செய்ய வந்தேன் என்று கூறினார். தொடர்ந்து அவர் தேர்தல் நடத்தும் அலுவலர் தவச்செல்வனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.