செங்கல்பட்டில் கொரோனா தடுப்பூசி தயாரிக்க எம்பி ஜோதிமணி கோரிக்கை
செங்கல்பட்டில் உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி தயாரிப்பு வளாகத்தை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று ஜோதிமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி தட்டுபாட்டை நீக்க செங்கல்பட்டில் உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி தயாரிப்பு வளாகத்தை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவரக் கோரி மத்திய அரசுக்கு கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு அவர் எழுதியுள்ள கடித்த்தில் கூறியுள்ளதாவது,
நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசிகள் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், செங்கல்பட்டில் இருக்கும் ஒருங்கிணைந்த தடுப்பூசி தயாரிப்பு வளாகம் மத்திய அரசின் ஹெச்.எல்.எல் லைஃப்கேர் என்ற நிறுவனத்தின் கீழ் உள்ள ஹெச்.எல்.எல் பயோடெக் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு சொந்தமானது.
பல்வேறு உயர்தர தொழில்நுட்பங்களுடன் 100 ஏக்கர் பரப்பளவில் 2012 ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசால் நிறுவப்பட்ட இந்த மையம் 585 மில்லியன் உயிர்காக்கும் தடுப்பூசிகளை தயாரிக்கும் திறன் கொண்டது.
ஆனால் இத்தகைய நிறுவனம் இதுவரை பயன்பாட்டில் இல்லை என்பது துரதிஷ்டவசமானது. இதுவரை இந்த மையத்தில் ஒரு தடுப்பூசி கூட தயாரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 2021 இல் இந்திய அரசு தனியார் நிறுவனங்களை இங்கு தடுப்பூசி தயாரிக்க அழைப்பு விடுத்த நிலையிலும், இதுவரை இதுகுறித்து எந்த முன்னேற்றமும் இல்லை.
கொரோனா நோயைத் தடுக்கவேண்டுமென்றால் நம்மிடம் இருக்கும் அனைத்து கருவிகளையும் பயன்படுத்த வேண்டியது அவசியமாகும். சில நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிராவில் உள்ள ஆஃப்கின் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்திற்கு தடுப்பூசிகள் தயாரிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்பது இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
அதுபோல, தடுப்பூசி தயாரிப்பை பெருக்க செங்கல்பட்டில் உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி தயாரிப்பு வளாகத்தையும் உடனடியாக மத்திய அரசு செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். என அந்த கடித்த்தில் எம்பி ஜோதிமணி வலியுறுத்தியுள்ளார்.