கூட்டுறவு வங்கியில் பல கோடி மோசடி ? வங்கியை விவசாயிகள் முற்றுகை

கரூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர்களின் நகைக்கடன், சேமிப்பு கணக்கு உள்ளிட்டவற்றில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் கூறிய விவசாயிகள் வங்கியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2021-06-21 12:28 GMT

கரூர் வேட்டமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை  பணம் மோசடி செய்ததாக கூறி விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

கரூர் மாவட்டம் வேட்டமங்கலத்தில் உள்ள வேட்டமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினராக உள்ளனர். இந்த வங்கி மூலம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன், நகைகடன் உள்ளிட்டவைகளும் வழங்கப்படுகின்றன. 

    பல விவசாயிகள் இந்த வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளனர். இந்நிலையில், இந்த இந்த வங்கியில் வேட்டவலம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பலர் கடந்த ஜனவரி மாதம் நகை கடன் கேட்டு வங்கியில் நகைகளை அடமானம் வைத்துள்ளனர்.

அப்பொழுது வங்கி ஊழியர்கள் நகைகளை பெற்றுக்கொண்டு தற்சமயம் வங்கியில் பணம் இல்லை என்றும், பணம் வந்ததும் வாடிக்கையாளரின் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

    இதேபோல, பலரிடமும் நகைகளை பெற்றுக்கொண்டு உடனடியாக கடன் வழங்கப்படவில்லை என தெரியவருகிறது ஆனால் அதன்பிறகு தேர்தல் அறிவிக்கப்பட்டதால் எந்த வாடிக்கையாளர்களுக்கும் கடனுக்கான பணம் வழங்கப்படவில்லை.

      இந்நிலையில் கடந்த சில தினங்களாக வங்கி உறுப்பினர்கள் சிலர் வங்கியை அணுகி நகை கடனுக்கான தொகையை கோரியுள்ளனர்.   அதற்கு வங்கி ஊழியர்கள் கடன். பெற்ற நபர்களுக்கு உடனடியாக பணம் வழங்கப்பட்டுவிட்டதாக தெரிவித்தனர். 

இதனால் பலரும் அதிர்ச்சியடைந்தனர். வங்கியில் உறுப்பினராக உள்ள 50க்கும் மேற்பட்டோர் திரண்டு தங்களுக்கு வங்கியில் வைத்த நகை கடனுக்கான தொகை இன்னும் வழங்கப்படவில்லை என புகார் அளித்து வங்கியை முற்றுகையிட்டனர்.

      அதேபோல வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ள பலரும் தங்களது வங்கி கணக்கு புத்தகத்தில் உள்ள தொகையைவிட வங்கியில் உள்ள ஆவணங்களில் தொகை இருப்பு குறைவாக உள்ளதாகவும் தங்கள் பெயரில் உள்ள பணத்தை வங்கியில் உள்ள யாரோ எடுத்து விட்டதாகவும் குற்றம் சாட்டி வங்கியை முற்றுகையிட்டனர். 

      இதையடுத்து கரூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் பாஸ்கர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பொதுமக்களிடமும் கூட்டுறவு வங்கி ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார்.   

     இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த  பெண். ஒருவர்   கூறுகையில் ஜனவரி மாதம் நகைக்கடன் வைத்தபோது வங்கியில் பணம் இல்லை என கூறினார்.

இதுநாள் வரை பணம் வழங்கப்படவில்லை. ஆனால் ஜனவரி நான் வைத்த நகைக்கான கடன் தொகையை அப்போதே கொடுத்துவிட்டதாக ஆவணங்களை காண்பிக்கின்றனர்.  எனது பெயரில் யாரோ பணத்தை எடுத்து விட்டு எனக்கு தராமல் ஏமாற்றி விட்டனர் என குற்றம் சாட்டினார்.

      இதுகுறித்து வேட்டமங்கலம் பகுதியை பிரமுகர் சேகர் என்பவர் கூறுகையில், வங்கியில் உறுப்பினராக உள்ள பலரையும் வங்கியில் பணிபுரிந்தவர்கள் ஏமாற்றியுள்ளனர்.

குறிப்பாக நகைக் கடனுக்கு, நகைகளை வாங்கிக் கொண்டு பணத்தை கொடுக்காமல் ஏமாற்றியுள்ளனர்.  அதுபோல சேமிப்பு கணக்கிலிருந்து பணம் திருடப்பட்டுள்ளது. எனவே ஒரு உயரதிகாரியை கொண்டு வெளிப்படையான விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றார்.

Tags:    

Similar News