ஆற்றுக்கால் பகவதி அம்மனுக்கு பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு
ஆற்றுக்கால் பகவதி அம்மனுக்கு 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.;
பொங்கலிடும் பெண்கள்.
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற ஆற்றுகால் பகவதி அம்மன் திருக்கோவிலில் புகழ்பெற்ற பொங்கல் வழிபாடு இன்று நடைபெற்றது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் நடைபெறும் உலக புகழ்பெற்ற பொங்கல் விழாவில் லட்சக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிடுவது வழக்கம்.
இந்த வருடம் ஆற்றுகால் பகவதி அம்மன் திருக்கோவிலில் பொங்காலை நிகழ்ச்சியில் ஆலய நிர்வாகம் மற்றும் கேரளா அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி கொரோனா நோய்தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஆற்றுகால் பகவதி அம்மன் ஆலய வளாகம் மற்றும் பொது இடங்களில் பொங்கல் வைத்து வழிபடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
எனினும் கேரளா மற்றும் தமிழகத்தில் இருந்து வந்து இருந்த பக்தர்கள் ஆலயத்தின் அருகிலுள்ள வீடுகளின் வளாகத்திலும் பொங்கலிட்டு வழிபட்டனர். முன்னதாக காலை 10.50 மணிக்கு ஆலயத்தின் முன்பு அமைக்கபட்டு இருந்த பண்டார அடுப்பில் ஆலய அர்ச்சகர் தீபம் ஏற்றி பொங்கல் வழிபாட்டை தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து பொங்காலை நிகழ்ச்சி தொடங்கியது, கோவிலை சுற்றி 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற இந்த பொங்கல் வழிபாட்டில் கேரளா மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து இருந்த 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் பொங்கலிட்டு வழிபட்டனர்.