திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
குமரியின் குற்றாலமான திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல் போட்டு மகிழ்ந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவி கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த ஆறு மாதங்களாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் அருவியில் குளிக்க முடியாமல் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்து வந்தனர்.
கொரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் பொதுமக்கள் செல்லவும் பார்வையிடவும் அரசு அனுமதி வழங்கியது.
இந்நிலையில் விடுமுறை தினமான இன்று தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து இருந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் உற்சாக குளியல் போட்டு மகிழ்ந்தனர்.
அருவியில் மிதமான தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்ததை தொடர்ந்து அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
மேலும் சிறுவர் பூங்கா, நீச்சல் குளம் சென்றும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் படகு சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.