பப்ஜி விளையாட தடை - வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன்
பப்ஜி விளையாட பெற்றோர்கள் தடை விதித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன்.;
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே பாலாமடம் பகுதியை சேர்ந்தவர் சர்ஜின், இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகள், மகன் உள்ளனர். இவரது மகன் நிஹன் மேக்மில்லர், 14 வயதான இவர் வாவறை பகுதியில் உள்ள ஒரு அரசு உதவிபெறும் பள்ளியில் 9 ம் வகுப்பு படித்து வருகிறான். தற்போது கொரோனா காரணமாக பள்ளிகள் செயல்படாமல் இருப்பதால் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வகுப்புகளில் பயின்று வந்துள்ளார்.
அதற்காக அவரது தந்தை ஒரு ஆன்ட்ராய்டு மொபைல் போனும் வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் இந்த மாணவன் ஆன்லைன் வகுப்புகள் முடிந்த பின்னரும் மொபைல் போனே கதி என இருந்துள்ளார். மேலும் பப்ஜி விளையாட்டில் நேரத்தை செலவிட்டுள்ளார், இதனை பலமுறை சிறுவனின் பெற்றோர்கள் கண்டித்தும் சிறுவன் கேட்காமல் இருந்துள்ளான்.
இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் சிறுவனின் தந்தை வீட்டிற்கு வந்த போது சிறுவன் தந்தை வருவதையும் கவனிக்காமல் மொபைல் போனில் விளையாடி கொண்டு இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த சர்ஜின் சிறுவனின் கையில் இருந்த மொபைல் போனை வாங்கி கொண்டு வெளியே சென்றுள்ளார். இதனால் கோபமடைந்த சிறுவன் வீட்டிலிருந்து வெளியேறி மாயமாகி உள்ளான்.
ஆனால் வீட்டில் உள்ளவர்கள் எங்காவது விளையாட சென்றிருப்பான் என நினைத்து கொண்டு இருந்துள்ளனர் ஆனால் இரவு கடந்த பின்பும் சிறுவன் வீடு திரும்பாததால் கலக்கம் அடைந்த பெற்றோர் சிறுவனை பல இடங்களில் தேடி உள்ளனர்.
மாயமான சிறுவன் குறித்த எந்த தகவலும் கிடைக்காததால் நித்திரவிளை போலீசில் புகார் அளித்துள்ளனர் புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சிறுவனை தேடி வருகின்றனர். பப்ஜி விளையாடியதை கண்டித்ததால் சிறுவன் மாயமான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.