காதல் திருமணம் செய்த மாணவி தீயில் கருகி பலி - ஆர்டிஓ விசாரணை
குமரியில் காதல் திருமணம் செய்த மாணவி தீயில் கருகி பலியான நிலையில் ஆர்டிஓ மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .;
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மறவன்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் லிசா (19) தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தபோது இவருக்கும் அதே பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக பணிபுரியும் மார்தாண்டம் பகுதியை சேர்ந்த விஷ்ணு ( 24 ) என்பவருக்கும் காதல் ஏற்பட்டு உள்ளது.
இதற்கு இரு வீட்டார் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் எதிர்ப்பை மீறி இருவரும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டு மார்தாண்டம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் மனைவிக்கு சமையல் செய்ய தெரியாது என்ற காரணத்தால் அவ்வப்போது இருவருக்கும் இடையே தகறாறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 30 தேதி லிசா உடலில் தீ பற்றி எரிய அலரல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டனர்.
உடலில் எரிந்த நெருப்பை அணைத்து 70 சதவீத தீ காயங்களுடன் ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த நிலையில் நேற்று நள்ளிரவு லிசா சிகிட்சை பலனின்றி உயிர் இழந்தார்.
இதனிடையே வழக்கு பதிவு செய்த மார்தாண்டம் போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் திருமணம் ஆகி மூன்று மாதங்களே ஆனதால் ஆர்டிஓ விசாரணையுடன் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.