குமரியில் பல்வேறு இடங்களில் ரப்பர் ஷீட்டுக்கள் திருடிய கொள்ளையன் கைது
குமரியில் பல்வேறு இடங்களில் ரப்பர் ஷீட்டுக்கள் திருடிய கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம், குலசேகரம் திருவட்டார் ஆகிய பல பகுதிகளில் தொடர்ச்சியாக ரப்பர் ஷீட்டுகள் திருடப்பட்டு வந்தது.
இது குறித்து மாவட்டத்தின் பல காவல் நிலையங்களில் தொடர்ந்து புகார்கள் வந்ததன் அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டார்.
அதன்படி ரப்பர் ஷீட் திருடர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது, அதனைத் தொடர்ந்து தக்கலை துணை காவல் கண்காணிப்பாளர் கணேசன் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக ரப்பர் ஷீட்டுகளை திருடி வந்தது திற்பரப்பு பகுதியை சேர்ந்த ஜெகன்(35) என்பது தெரியவந்தது, இதனை தொடர்ந்து அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர் .
கொள்ளையனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஜெகன் சுமார் 6 1/2 டன் ரப்பர் ஷீட்டுகள் திருடி இருப்பது தெரியவந்ததது. பின்னர் குற்றவாளி ஜெகன் மீது வழக்குப்பதிவு செய்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்ட ஜெகன் மீது குலசேகரம் காவல் நிலையத்தில் ஏழு வழக்குகளும், திருவட்டார் காவல்நிலையத்தில் இரண்டு வழக்குகளும், அருமனை காவல் நிலையத்தில் மூன்று வழக்குகளும், கடையாலுமூடு காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகளும், கொற்றிகோடு காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் பேச்சிப்பாறை காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் என 16 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.