வழிப்பாதை அடைப்பு - அதிகாரியை முற்றுகையிட்ட பொதுமக்கள்
குமரியில் 40 ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதை அடைக்கப்பட்டதால் அதிகாரியை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.;
40ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வரும் நடை பாதையை அடைத்த பேரூராட்சி செயல் அலுவலரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே காஞ்சாம்புறம் பகுதியில் ஏழுதேசம் பேரூராட்சிக்கு உட்பட்ட மாலை நேர சந்தை 40 வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வந்தது.
இந்த சந்தை அமைந்திருக்கும் பகுதியில் கட்டண கழிப்பிடம், இளைஞர்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டிய உபகரணங்கள் உள்ளிட்டவை இருந்தன.
தற்போது கட்டண கழிப்பிட கதவுகள் பெரிய பூட்டு போட்டு பூட்டியும் உடற்பயிற்சி செய்ய பயன்படுத்தும் உபகரணங்கள் உரிய பராமரிப்பு இல்லாமல் சீர்குலைந்தும் கிடக்கின்றன.
இந்நிலையில் பேரூராட்சி நிர்வாகம் மாலை நேர சந்தையில் மீன், காய்கறி, பழங்கள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்ய வரும் வியபாரிகளை சந்தைக்குள் அனுமதிக்காமல் அந்த இடத்தை பல இடங்களில் இருந்து சேகரிக்கும் குப்பைகளை கொண்டு வந்து வைக்கும் குப்பை கிடங்காக மாற்றி வைத்துள்ளனர்.
இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியும் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு காணப்படுகிறது, இதன் காரணமாக இரவு நேரங்களில் அதிகப்படியான கொசுக்கள் உற்பத்தி ஆகி வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு பல்வேறு நோய் தொற்றுக்களை ஏற்படுத்தி வருகிறது.
இதற்கு ஊர்மக்கள் தரப்பில் தொடர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இன்று மாலை சந்தைக்கு பின்னால் இருக்கும் மக்கள் தங்களது வீடுகளுக்கு செல்ல பயன்படுத்தி வந்த வழிப்பாதையை மறைத்து டிம்போக்களில் மண்ணை கொண்டு வந்து கொட்டி உள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஊர் மக்கள் டெம்போக்களை சுற்றி வளைத்து சிறை பிடித்தனர், இது குறித்து தகவல் அறிந்து வந்த பேரூராட்சி செயல் அலுவலரையும் ஊர்மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நித்திரவிளை போலீசார் ஊர்மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி செயல் அலுவலரை பத்திரமாக மீட்டு சென்றனர் இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.