காவல்நிலைய முற்றுகை போராட்டம்: ஊராட்சி மன்றம் அறிவிப்பு

சட்டவிரோதமாக மண் எடுத்து விற்பனை, வீடுகள் இடிந்து விழும் அபாயம்..! காவல் நிலையத்தில்ஊராட்சி மன்றத்தினர் புகார்.;

Update: 2022-03-10 03:06 GMT

கன்னியாகுமரி மாவட்டம் நடைக்காவு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், மின்வாரிய ஊழியரான இவர் வீடு அமைந்திருக்கும் பகுதிக்கு கீழ் பகுதியை சேர்ந்த ஶ்ரீ கண்டன் எனபவர் வீடு கட்டுவதற்காக திட்டாக இருந்த மண்ணை ஜேஷிபி இயந்திரம் மூலம் இடித்து அதில் கிடைத்த மண்ணை சட்டவிரோதமாக விற்பனை செய்து அதில் வீடு கட்டி உள்ளார்.

இதனால் மணிகண்டன் வீடு அமைந்திருக்கும் பகுதி சுமார் 20 அடி பள்ளமாக காணப்பட்டு வருகிறது, மேலும் மழை காலங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு வீட்டிற்கு நடந்து செல்லும் பாதை முழுவதும் இடிந்து குறுகலாகி உள்ளது. அதோடு சேர்த்து வீடும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது, இதனால் மணிகண்டன் மண் அரிப்பால் வீடு இடிவதை தடுக்க தடுப்பு சுவர் கட்டி தர ஶ்ரீகண்டனிடம் கேட்டுள்ளார். அதற்கு ஶ்ரீகண்டனும் சம்மதித்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக தடுப்பு சுவர் கட்டி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

இதனால் வேதனை அடைந்த மணிகண்டன் நித்திரவிளை காவல்நிலையத்திலும் நடைக்காவு ஊராட்சி அலுவலகத்திலும் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார் ஆனால் இது சம்மந்தமாக உரிய நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து ஊராட்சி நிர்வாகத்தினர் தனி தீர்மானம் ஒன்றை போட்டு அதனை காவல்நிலையத்தில் கொடுத்து அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனாலும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்ததை தொடர்ந்து இன்று நித்திரவிளை காவல்நிலையத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் உட்பட வார்டு உறுப்பினர்கள் வந்தனர்.

மேலும் ஒரு வார காலத்திற்குள் மணிகண்டன் கொடுத்த புகார் மனு சம்பந்தமாக உரிய விசாரணை மேற்கொண்டு இடிந்து விழும் நிலையில் இருக்கும் வீட்டை பாதுகாக்க தடுப்புச்சுவர் கட்டிகொடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனில் ஊராட்சி மன்றம் சார்பில் காவல்நிலைய முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று எழுதப்பட்ட மனுவை போலீசாரிடம் அளித்தனர். இதனால் நித்திரவிளை காவல்நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Tags:    

Similar News