வரதட்சணை கொடுமையால் பலியான இளம் பெண் - போலீஸ் பிடியில் கணவர்

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் பலியான நிலையில் அவரது கணவரை பிடித்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2021-06-23 13:45 GMT

கேரளா மாநிலம் கொல்லம் சாஸ்தான்கோட்டை பகுதியை சேர்ந்தவர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கிரன் குமார். இவர் அதே பகுதியை சேர்ந்த விஸ்மயி என்ற பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வருகிறார்.

இவருக்கு திருமணத்தின் போது பெண் வீட்டார் ஒரு ஏக்கர் நிலம் 100 சவரன் தங்க நகை மற்றும் 10 லட்சம் ருபாய் மதிப்புள்ள சொகுசு கார் ஒன்றையும் வழங்கி திருமணம் முடித்து வைத்துள்ளனர். இந்த நிலையில் திருமணம் முடிந்த சில நாளில் இருந்தே கிரன்குமார் தனக்கு கார் தேவை இல்லை, பணம் தான் தேவை என்றும் நீங்கள் வாங்கி கொடுத்திருக்கும் கார் நன்றாக இல்லை என்றும் கூறி மனைவியை துன்புறுத்த துவங்கி உள்ளார்.

மேலும் அவ்வப்போது மது குடித்து விட்டு வந்து விஸ்மயி மீது தாக்குதலும் நடத்தி உள்ளார். இது சம்பந்தமாக விஸ்மயி தனது தாய் தந்தையிடம் கூறியதை தொடர்ந்து அவரது சகோதரர் வந்து கேட்டதற்கு அவரையும் தாக்கி உள்ளார்.

இது சம்பந்தமாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையிலும் தொடர்ந்து விஸ்மயி மீது கிரன்குமார் தாக்குதல் நடத்தி துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த விஸ்மயி தனது தோழிகளுக்கு வாட்ஸ்அப் மூலம் தெரிவித்து வருத்தபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு கிரன்குமார் விஸ்மயியை பலமாக தாக்கி உடலில் பலத்த காயங்களை ஏற்படுத்தி சித்திரவதை செய்து உள்ளார்.

இதனால் மனமுடைந்த விஸ்மயி வீட்டின் அறையினுள் உள்ள கழிவறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார் இது குறித்த தகவல் விஸ்மயின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் வந்து விஸ்மயின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர்.மேலும் விஸ்மயாவின் உடலில் பலத்த காயங்கள் காணப்பட்டதால் சந்தேகமடைந்த போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் விஸ்மயின் கணவர் கிரன்குமார் காவல்நிலையத்தில் தானகவே வந்து சரணைடந்துள்ளார், போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விஸ்மயியின் உறவினர்கள் கிரன்குமார் தான் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டு நாடகமாடி இருக்கலாம் என சந்தேகப்படுவதாக போலீசில் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News