கஞ்சா பயன்பாட்டிற்கு எதிராக போலீசார் விழிப்புணர்வு நடவடிக்கை
குமரியில் கஞ்சா குட்கா பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கையில் காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.;
கஞ்சா தீமை குறித்து மார்த்தாண்டம் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் கஞ்சா குட்கா பயன்பாடுகள் அதிகரித்து வருகிறது, இதனால் பலவித அசம்பாவிதங்களும் நடந்தேறி வருகின்றன. இதனை தடுக்க கஞ்சா, குட்கா விற்பனை மற்றும் பயன்படுத்துபவர்கள் குறித்த தகவல்களை பொதுமக்கள் அறிவிக்க புதிய இலவச வாட்ஸ்அப் எண் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டு உள்ளது.
அது குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் மார்த்தாண்டம் பேருந்து நிலையத்தில் நிறுத்தி இருந்த பேருந்துகளில் மார்த்தாண்டம் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் வாட்ஸ்அப் எண் அடங்கிய ஸ்டிக்கர்களை ஒட்டினர். மேலும் பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகளிடம் தகவல் எவ்வாறு கொடுப்பது என்றும், தகவல் கொடுப்பவர்கள் குறித்த விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்பது குறித்த விளக்கங்களை அளித்தனர்.