குமரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்: களை கட்டிய தோவாளை மலர் சந்தை
மலையாள வருட பிறப்பு மற்றும் ஓணம் கொண்டாட்டத்தை முன்னிட்டு குமரி தோவாளை மலர் சந்தை களை கட்டியது.
கேரளா மக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் மிக முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை கடந்த 11 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது, வரும் 21 ஆம் தேதி திருவோண பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
ஓணம் பண்டிகை கொண்டாடப்படும் 10 நாட்களும் தங்களை ஆண்ட மாமன்னர் மகாபலி சக்கரவர்த்தி தங்களை காண வருவார் என்பது ஐதீகம்.
அதன் படி கேரளா மக்கள் ஓணம் கொண்டாடப்படும் 10 நாட்களும் தங்கள் வீட்டின் முன் பல வண்ண மலர்களால் அத்தப்பூ கோலம் போட்டு மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்பார்கள்.
மேலும் மலையாள வருடப்பிறப்பான சிங்கம் ஆண்டு என்று அழைக்கப்படும் ஆவணி மாதம் இன்று தொடங்கிய நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் உள்ள மலர் சந்தையில் விற்பனை அதிகரித்து உள்ளது.
அரளி, ரோஜா, ஜவ்வந்தி, மல்லி, பிச்சி என பலவகையான மலர்கள் தோவாளை மலர் சந்தையில் இருந்து கேரளாவிற்கு அனுப்பப்படுகிறது.
கொரோனா பரவல் காரணமாக மந்த நிலையில் காணப்பட்ட தோவாளை மலர் சந்தையில் தற்போது ஓணம் விற்பனை அதிகரித்து உள்ளதால் தோவாளை மலர் சந்தை களைகட்டி உள்ளது.