குமரியில் முதியோர் இல்லம் பெயரில் பண மோசடி: பெண் உட்பட 3 பேர் கைது

குமரியில் முதியோர் இல்லம் பெயரில் பண மோசடியில் ஈடுபட்ட பெண் உட்பட 3 பேரை ஊர் மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Update: 2021-10-26 14:15 GMT

கருங்கல் அருகே முதியோர் இல்லம் பெயரில் பண மோசடியில் ஈடுபட்ட பெண் உட்பட 3 பேரை பிடித்து பாேலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள ஆலஞ்சி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மதுரையில் செயல்பட்டு வரும் அன்னை தெரேசா முதியோர் இல்லத்தின் பெயரில் போலீயாக ரசீது அடித்து அதனை காண்பித்து பண வசூலில் ஈடுபட்டுள்ளார்.

அதனை நம்பி அந்த பகுதியை சேர்ந்த பலரும் பணம் வழங்கி உள்ளனர், இந்த நிலையில் ஆலஞ்சி கிறிஸ்தவ ஆலயம் அருகே பணம் வசூலிக்க சென்ற போது அந்த பகுதியில் உள்ள நபர் ஒருவர் தனது வீட்டிற்கு வந்து ஜெபம் செய்ய கோரி உள்ளார். உடனே அந்த பெண் வீடுகளில் எல்லாம் ஜெபம் செய்ய முடியாது வேண்டுமென்றால் மதுரைக்கு வாருங்கள் என கூறி அங்கிருந்து நழுவி சென்றுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த அந்த பகுதி மக்கள் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி கிறிஸ்தவ மத பைபிள் வாசகங்களை கேட்டுள்ளனர். அதற்கும் அந்த பெண் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து அந்த பெண் வைத்திருந்த பையை பரிசோதித்து பார்த்த போது அதில் ஒரு அடையாள அட்டை இருந்துள்ளது. அதில் அந்த பெண்ணுடைய பெயர் மேரி என இருந்துள்ளது. உடனே ஊர்மக்கள் அந்த பெண்ணை ஆலஞ்சி கிறிஸ்தவ ஆலயத்திற்குள் அடைத்து வைத்துக்கொண்டு கருங்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.

போலீசார் சம்பவ இடம் வருவதற்கு முன்னதாக அதே பகுதிக்கு சுமார் 25 வயது மதிக்கத்தக்க இரண்டு வாலிபர்கள் வந்து அவர்களும் அன்பு மலர் என்ற அமைப்பின் பெயரை சொல்லி பண வசூலில் ஈடுபட்டுள்ளனர். அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஊர்மக்கள் 3 பேரையும் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண் நாகர்கோவில் அருகே தோவாளை பகுதியை சேர்ந்தவர் என்றும் அவருடைய உண்மையான பெயர் முத்துமாரி என்றும் தெரிய வந்தது. அவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் 3 மகன்கள் உள்ளனர் என்பதும் குமரி மாவட்டம் முழுவதும் அன்னை தெரேசா முதியோர் இல்லத்தின் பெயரை பயன்படுத்தி பண வசூலில் ஈடுபட்டு சொகுசாக வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது.

அதேபோல் கைதான இரண்டு வாலிபர்களும் கர்நாடக மாநிலம் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் ஆறு குளங்களில் மீன்பிடித்து விற்பனை செய்யும் தொழில் செய்வதற்காக வந்தவர்கள் என்றும் மீன்பிடி தொழில் இல்லாத நேரங்களில் இதுபோன்ற பண வசூலில் ஈடுபடுவதும் வசூலில் கிடைக்கும் பணத்தை ஜாலியாக செலவழித்து வந்ததும் தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் மூன்று பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News