கனமழையால் மீண்டும் பாதிப்பை சந்தித்த குமரி - பொதுமக்கள் அச்சம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் மீண்டும் பாதிப்பு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோற பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக மாவட்டத்தின் முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு உள்ளிட்ட அணைக்கு நீர்வரத்து அதிகரித்த நிலையில் அங்கு இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது.
48 அடி கொள்ளளவு கொண்ட பேசிப்பாறை அணையில் இருந்து மணிக்கு 2200 கன அடி நீரும் 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணியில் இருந்து மணிக்கு 1100 கன அடி நீரும் திறக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தாமிரபரணி ஆறு பழையாறு வீராணமங்களம் ஆறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும் ஆற்றின் கரையோரம் இருக்கும் சுமார் 12 க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்ததால் ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
தற்போது மழை இல்லை என்றாலும் ஏற்கனவே கனமழையால் பெரும் பாதிப்பை சந்தித்த குமரிமாவட்ட மக்கள் மத்தியில் இந்த கனமழை அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.