குமரியில் உட்கட்சி பூசல் : உடைந்தது காங்கிரஸ் கட்சி
காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணிக்கு மீண்டும் தேர்தல் சீட்டு வழங்க கூடாது என்று கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.;
10 ஆண்டு எம்.எல்.ஏ வாக இருந்த காங்கிரஸ் சிட்டிங் எம்.எல்.ஏ விஜயதாரணிக்கு மீண்டும் தேர்தல் சீட்டு வழங்கினால் அவரை எதிர்த்து பலர் போட்டியிட தயார் ஆவார்கள் என்று கன்னியாகுமாரி மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக எம்.எல்.ஏ வாக பதவி வகித்து வருபவர் விஜயதாரணி. இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக தொகுதியில் உள்ள பிரச்சினை மற்றும் மக்கள் பிரச்சினைகளை தீர்க்கவோ கட்சி பிரச்சனைகளை தீர்க்கவோ இவர் முன் வரவில்லை என அந்த தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர் தெரிவிப்பதாக கூறுகிறார்கள்.
மேலும் தொகுதிக்குட்பட்ட 73 பேர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ள நிலையில் அவர்களில் ஒருவரை நிறுத்த தலைமை முன் வர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். தங்களது கோரிக்கையை நிராகரித்து தலைமை மீண்டும் விஜயதாரணியின் பெயரை அறிவிக்கும் பட்சத்தில் அவருக்கு எதிராக தொகுதிக்குட்பட்ட 22 பேரை போட்டி வேட்பாளராக களம் இறக்கவும் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே காங்கிரஸ் கட்சியில் உள்கட்சி பூசல் அதிகம் கொண்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் சிட்டிங் எம்.எல்.ஏ வுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் குரல் கொடுத்து இருப்பது பரபரப்பையும், அரசியலில் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.