சட்டவிரோத கருக்கலைப்பு: உதவி காவல் ஆய்வாளர் உட்பட 8 பேர் மீது வழக்கு
நீதிமன்ற உத்தரவுப்படி சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்ட உதவி காவல் ஆய்வாளர் உட்பட 8 பேர் மீது அனைத்து மகளிர் போலீசார் வழக்கு.;
கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதியான மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜோஸ்பின்( 32 )திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் நர்ஸாக வேலை பார்த்து வந்த இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார்.
இந்நிலையில் கணவருடன் விவாகரத்து பெற்று பளுகல் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த அஜீஸ் என்ற நபர் ஜோஸ்பினுக்கு பழக்கமாகி திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி அவரிடம் இருந்து பணம் நகைகளை வாங்கி விட்டு திருமணம் செய்ய மறுத்துள்ளார். தான் ஏமாற்றபட்டதை உணர்ந்த ஜோஸ்பின் அஜீஷின் வீட்டிற்கு சென்று தன்னிடம் இருந்து வாங்கி ஏமாற்றிய பணம் நகைகளை கேட்டுள்ளார்.
அதற்கு அஜீஸ் மறுத்ததால் ஜோஸ்பின் பளுகல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார், அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அங்கு பணிபுரிந்து வந்த தலைமை காவலரான கணேசன் என்பவர் ஜோஸ்பினிடம் நம்பர் வாங்கி உதவி செய்வது போல் அன்பாக பேசி நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளார்.
மேலும் காவல்நிலையத்தில் புதிதாக இடம் மாறுதல் ஆகி வந்த காவல் உதவி ஆய்வாளர் சுந்தரலிங்கத்திடம் ஜோஸ்பினை அழைத்து சென்று வழக்கு சம்பந்தமாக உதவி செய்ய ஏற்பாடு செய்து அவரது தொலைபேசி எண்ணை சுந்தரலிங்கத்திடம் கொடுத்துள்ளார். ஆரம்பத்தில் இயல்பாக வழக்கு சம்பந்தமாக பேசி வந்த உதவி ஆய்வாளர் சுந்தரலிங்கம் போக போக பேச்சில் மாற்றம் ஏற்பட்டு ஆபாசமாக பேச துவங்கி உள்ளார். அதற்கு ஜோஸ்பின் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தன்னுடன் உடலுறவு கொண்டால் அஜிஸை அழைத்து வந்து கட்டி வைத்து உதைத்து பணம் நகைகளை வாங்கி தருவதாக கூறி மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்த நிலையில் ஜோஸ்பின் குடியிருந்த வீட்டின் மொட்டை மாடியில் வைத்து ஜோஸ்பினிடம் வலுக்கட்டாயமாக உடலுறவு செய்துள்ள சுந்தரலிங்கம் இதனால் ஏற்பட்ட கருவையும் சட்டத்தை மீறி களைத்துள்ளார். இதனிடையே முதலமைச்சர் தனிப்பிரிவு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர், டிஐஜி, ஐஜி என அனைவருக்கும் தான் ஏமாற்றபட்டது சம்பந்தமாக ஜோஸ்பின் புகார் அளித்துள்ளார். பல்வேறு இன்னல்களுக்கு இடையே ஜோஸ்பின் வழக்கை முன்னெடுத்து சென்றதால் சுந்தரலிங்கம் திண்டுக்கல் மாவட்டத்திற்கு இடமாறுதல் ஆகி சென்றிருந்தார்.
தற்போது இவர் தேனி மாவட்டத்தில் உள்ள வீராபாண்டி என்னும் காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வரும் நிலையில் ஜோஸ்பினின் வழக்கு சம்பந்தமாக அதிகாரிகள் முறையான விசாரணை நடத்தாமல் இருப்பதாக நீதிமன்றத்தை நாடினார். இந்நிலையில் ஜோஸ்பினை சீரழித்து ஏமாற்றிய காவல் உதவி ஆய்வாளர் சுந்தரலிங்கம் மற்றும் அதற்கு துணை போன பளுகல் காவல்நிலைய தலைமை காவலர் கணேசன், அடியாட்களான விஜின், அபிஷேக், உமேஷ், கருக்கலைப்பு செய்த மருத்துவர் கார்மல் ராணி, மருத்துவமனை உரிமையாளர் தேவராஜ், மற்றும் அனில்குமார் உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்ய குழித்துறை நீதிமன்றம் அதிரடி உத்தரவை நேற்று பிறப்பித்தது.
அதன்பேரில் மார்த்தாண்டம் மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் ஞானபிரகாசி சம்பவத்தில் தொடர்புடைய காவல் உதவி ஆய்வாளர் உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.