குமரியில் தொடர் கனமழை: திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு

குமரியில் கனமழை காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விளை நிலங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது.;

Update: 2021-11-11 14:45 GMT

தொடர் கனமழையால் திற்பரப்பு அருவில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்.

தமிழகத்தில் கடந்த 25-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது, கடந்த வாரம் முதல் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வரும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் சாரல் மழையும் அவ்வப்போது கனமழையும் பெய்து வந்தது.

இந்நிலையில் நேற்றிரவு முதல் விடிய விடிய பெய்த கனமழை காரணமாகவும், மலையோர பகுதிகளில் தொடரும் கனமழை ரணமாகவும் மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. அதன்படி 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் தற்போது 43.42 அடியாக உயர்ந்தது, இதனால் இந்த அணையில் இருந்து வினாடிக்கு 1292 கன அடி உபரிநீர் வெளியேற்றபட்டு வருகிறது.

இதே போன்று 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார் 1, 2, ஆகிய இரண்டு அணையில் இருந்து 1028 கன அடி உபரிநீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் இருந்து வினாடிக்கு 800 கன அடி உபரிநீர் என மொத்தம் 3100 கன அடி உபரிநீர் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக குமரியின் குற்றாம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு நீர் வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அங்குள்ள பாதுகாப்பு வேலிகளை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் கோதையார், பரளியார் மற்றும் தாமிரபரணி ஆறு ஆகிய மூன்று ஆறுகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனிடையே ஆற்றின் கரையோரம் மிக தாழ்வான பகுதிகளான திக்குறிச்சி, சிதறால், முஞ்சிறை உட்பட பல்வேறு பகுதிகளில் விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்து வாழை, ரப்பர் மற்றும் மரவள்ளிக்கிழங்கு போன்ற விவசாய பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News