கேரளாவில் அரசு போக்குவரத்து சேவை ஸ்தம்பிப்பு: பொதுமக்கள் பாதிப்பு
கேரளாவில் அரசு போக்குவரத்து சேவை ஸ்தம்பித்ததால் பொதுமக்கள் பெரும் பாதிப்பு அடைந்தனர்.;
கேரள மாநில பஸ்கள்.
கேரள அரசாங்கம் போக்குவரத்து துறையில் புதிதாக பல்வேறு மாற்றங்களை கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு போக்குவரத்து துறை பணியாளர்களின் பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அதனை பொருட்படுத்தாமல் அரசாங்கம் திட்டங்களை நடைமுறை படுத்தி உள்ளது.
இதனை கண்டித்தும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் அரசு போக்குவரத்து பணியாளர் அமைப்புகளான இடதுசாரிகள் மற்றும் பி.எம்.எஸ் அமைப்பினர் போராட்டம் நடத்த போவதாக நேற்றைய தினம் அறிவித்து இருந்தனர். அதற்கு கேரள அரசு தரப்பில் எந்த பதிலும் கிடைக்காத நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் பேருந்துகளை டிப்போக்களில் ஒதுக்கிவிட்டு திடீர் வேலை நிறுத்தத்தில் இறங்கி உள்ளனர்.
நேற்று நள்ளிரவு துவங்கிய வேலை நிறுத்தம் இன்றும் தொடர்கிறது இந்த போராட்டத்தின் வாயிலாக போக்குவரத்து பணியாளர்களுக்கு வேலை நேரத்தில் மாற்றம் வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும், கேரள அரசு போக்குவரத்து கழகம் புதிதாக துவங்கி உள்ள ஸ்விப்ட் என்ற நிறுவனத்தை நிறுத்த வேண்டும்.
பொதுமக்களின் தேவைக்கு ஏற்றார்போல அதிக அளவில் புதிய பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து பணியாளர்கள் இரவு வேளையில் திடீரென அறிவித்த இந்த போராட்டத்தால் கேரளாவில் இருந்து வெளியூர் செல்வதற்க்காக அரசு பேருந்துகளை நம்பி வந்த மக்கள் ஏமாற்றமடைந்து ஆட்டோ கார்கள் மூலமாக ஊர்களுக்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.
மேலும் பேருந்துகள் ஏதும் இயங்காததால் திருவனந்தபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள சாலைகள் வேறிச்சோடி கிடக்கின்றன. தொடர்ந்து போராட்டம் நீடித்து வருவதால் பொதுமக்கள் சிரமம் அடைவதை தடுக்க போராட்டத்தை முடித்த வைக்க கேரள போக்குவரத்து துறை அமைச்சர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.