குமரியில் விசைப்படகு கடலில் கவிழ்ந்து விபத்து - 20 மீனவர்கள் தப்பினர்

குமரியில் விசைப்படகு கடலில் கவிழ்ந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக, 20 மீனவர்கள் உயிர் தப்பினர்.

Update: 2021-12-13 12:00 GMT

கோப்பு படம் 

கன்னியாகுமரி மாவட்டம் இனையம் மணடலம் இனையம்புத்தன்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த சார்லஸ் என்பவருக்கு சொந்தமான அனிட் மரியா என்ற விசைபடகில்,  கடந்த 5 ம் தேதி கேரள மாநிலம் எர்ணாகுளம் மனம்பம் துறைமுகத்தில் இருந்து குமரி மாவட்ட மீனவர்கள் 18 பேர் மற்றும் வடநாட்டை சேர்ந்த 2 பேர் என 20 பேர், ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

இன்று அதிகாலை கர்நாடக மாநிலம் மூடேஷ்வரம் துறைமுக பகுதியில் இருந்து சுமார் 30 நாட்டிகல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, படகின் அடிப்பாகத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டு, படகிற்குள் தண்ணீர் புகுந்துள்ளது. அதிர்ச்சியடைந்த மீனவர்கள் அனைவரும்,  உடனடியாக படகில் தங்களுடன் கொண்டு சென்ற 3 சிறிய பைபர் படகுகளை பயன்படுத்தி பாதுகாப்பாக வெளியேறினர்.

விசைபடகிற்குள் சிறுக சிறுக தண்ணீர் புகுந்து,  சுமார் 55 லட்சம் ருபாய் மதிப்பிலான படகு முழுவதுமாக கடலுக்குள் மூழ்கியது. இதில் சுமார் 5 லட்சம் ருபாய் மதிப்பிலான மீன்பிடி உபகரணங்களான வலை,  தூண்டில் உள்ளிட்டவையும் கடலுக்குள் மூழ்கின. விபத்தை தொடர்ந்து, படகில் இருந்த 20 மீனவர்களும் பாதுகாப்பாக கர்நாடக மாநிலம் மூடேஷ்வரம் துறைமுகத்தில் கரை ஏறி உள்ளனர்.

Tags:    

Similar News