மீனவ கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு ஸ்டிக்கர்: குமரியில் பரபரப்பு
குமரியில் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்த மீனவர்கள் தங்கள் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டியதால் பரபரப்பு.;
கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கொல்லங்கோடு நகராட்சியில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே மீனவ கிராமங்களில் இருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
இந்நிலையில் நித்திரவிளை பகுதியில் மேற்கு கடற்கரை சாலையில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக தேங்கி நிற்கும் மழை நீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகியும் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறது.
இதற்கு முறையான வடிகால் நீர் ஓடை அமைக்காமல் சாலை போடபட்டதே காரணம் என கூறி அந்த சாலையின் ஓரம் முறையான வடிகால் நீர் ஓடை அமைக்க கேட்டு ஊர்மக்கள் பல வருடங்களாக மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் மக்கள் பிரச்சனையை கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகளை கண்டித்து நடைபெற இருக்கின்ற தேர்தலை மக்கள் புறக்கணிக்க போவதாக தெரிவித்து தங்களின் வீடுகளின் முன்பக்கம் உள்ள சுவர்களில் தேர்தல் புறக்கணிப்பு ஸ்டிக்கர் ஒட்டி உள்ளனர்.
இதனையடுத்து மீனவ கிராமங்களை தொடர்ந்து கரையோர பகுதிகளிலும் புதிதாக நகராட்சி உருவாக்கியதற்கு எதிர்ப்பு அதிகரித்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. மீனவ கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு ஸ்டிக்கரால் பரபரப்பு.