குமரி கரையில் ஒதுங்கிய நூற்றுக்கணக்கான டால்பின் மீன்கள்
குமரி கரையில் ஒதுங்கிய நூற்றுக்கணக்கான டால்பின் மீன்களை, மீனவர்கள் மற்றும் கடலோர போலீசார் மீட்டு, கடலில் விட்டனர்.;
கன்னியாகுமரி அருகே உள்ள கோவளம் கடற்கரை பகுதியில் டால்பின்கள் கரை ஒதுங்கின.
கன்னியாகுமரி மாவட்ட மேற்கு கடற்கரைப் பகுதிகளில் அவ்வப்போது டால்பின் மீன்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கூட்டமாக செல்வது வழக்கம். இயற்கைக்கு மாறான கடல் அதிர்வுகள் மற்றும் பெரிய கப்பல்கள் செல்லும் போது, டால்பின்கள் இடம் பெயர்வதும் கரைக்கு வருவதும் அவ்வப்போது நடப்பது உண்டு.
இந்நிலையில், நேற்று மாலை கன்னியாகுமரி அருகே உள்ள கோவளம் கடற்கரை பகுதியில் திடீரென நூற்றுக்கும் மேற்பட்ட டால்பின்கள் கரை ஒதுங்கின. இவற்றில் பல டால்பின்கள் கடலில் இருந்து கரைக்கு வந்ததால் அவை மூச்சு திணறல் காரணமாக உயிருக்கு போராடி வந்தன. இதனை கண்ட அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலோர பாதுகாப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தொடர்ந்து கரை ஒதுங்கிய டால்பீன் மீன்களை, உள்ளூர் மீனவர்கள் மற்றும் தமிழ்நாடு கடலோர போலீசார் காப்பாற்றி மீண்டும் கடலில் விட்டார்கள், இருந்த போதிலும் ஒரு டால்பின் உயிரிழந்தது. கோவளம் பகுதி மீனவர்களுடன் கடலோர பாதுகாப்பு படையினரும் டால்பின்களை காப்பாற்றுவதில் முனைப்புடன் இறங்கியதால் நூற்றுக்கணக்கான டால்பீன்கள் உயிர் தப்பின.