கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் அருகே வள்ளவிளை மீனவ கிராமத்தை சேர்ந்த ஜோசப் ஃபிராங்க்ளின் என்பவருக்கு சொந்தமான மெர்சிடிஸ் என்ற விசை படகில், ஜோசப் ஃபிராங்க்ளின், ஏசுதாசன், ஜான், ஜெனிஸ்டன் உள்ளிட்ட 11 மீனவர்கள் தேங்காய் பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த ஒன்பதாம் தேதி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
அவர்கள் படகில் ஆபத்து காலங்களில் தப்பிக்க வசதியாக இரண்டு நாட்டு படகும் இருந்தது. நேற்று முன் தினம் கர்நாடக மாநிலம் ஹார்வார் பகுதியில் 600 கடல் மைல் தொலைவில், குமரி மாவட்டம் வள்ளவிளை பகுதியை சேர்ந்த ஜோசப் ஃபிராங்க்ளின் என்பவருக்கு சொந்தமான மெர்சிடிஸ் என்ற விசை படகில் இருந்த நாட்டு படகு மிதந்து வந்ததை சக மீனவர்கள் பார்த்தனர்.
உடனடியாக இது குறித்து ஊருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த வழியாக வந்த கப்பல் மோதி, விசை படகு கடலில் மூழ்கி இருக்கலாம். அதில் இருந்த 11 மீனவர்களின் நிலைமை என்ன ஆனது என தெரியவில்லை என மீனவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில் தெற்காசிய மீனவ கூட்டமைபினர் மற்றும் வள்ளவிளை மீனவ கிராம அருட்பணியாளர்கள் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அரவிந்திடம் இன்று கோரிக்கை மனு அளித்தனர். அதில், கர்நாடக மாநில ஆழ் கடல் பகுதியில் கப்பல் மோதி படகை மூழ்கடித்து தப்பி சென்ற கப்பலை கண்டுபிடித்து கொலை குற்றவழக்கு பதிவு செய்ய வேண்டியும், உடனே கடற்படை கப்பல்களை பயன்படுத்தி மீனவர்களை மீட்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தற்போது ஒரு ஹெலிகாப்டர் மற்றும் வள்ளவிளை ஊரை சேர்ந்த ஏழு விசைபடகளும் மீனவர்களை தேடும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அதில் விசை படகு மற்றும் நாட்டு படகு ஆகியவற்றில் இரு துண்டுகள் மட்டுமே கடலில் கிடைத்துள்ளதாக வள்ளவிளையை சார்ந்த சுனில் என்பவர் கூறினார், எந்த கப்பல் என்பதை இதுவரை கண்டுபிடிக்கவில்லை, அவர்களை கண்டுபிடித்து கொலை குற்றவழக்கு பதிவு செய்யவேண்டும் என தெற்காசிய மீனவ அமைப்பின் பொது செயலாளர் அருட்பணியாளர் சர்ச்சில் தெரிவித்தார்.