மஹாளய அமாவாசை: குமரி கடலில் திதி, தர்ப்பணம் கொடுக்க தடைவிதிப்பு
மஹாளய அமாவாசை நாளில் குமரி கடல் பகுதியில் தர்ப்பணம் கொடுக்க தடை விதித்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாளை மஹாளய அமாவாசை நாளில் பொதுமக்கள் கடற்கரைகள், நீர்நிலைகள் போன்றவற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும் வழிபாட்டு தலங்களில் வழிபாடு செய்யவும் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டார்.
தர்ப்பணம் செய்யவும், திருக்கோவில்களில் தரிசனம் செய்யவும் கூட்டம் அதிகமாகி, அதனால் கொரோனா தொற்று ஏற்படும் சூழ்நிலை உருவாகக்கூடும் என்பதால், இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா மூன்றாம் அலை பரவலை தடுக்கும் வகையில், பொதுமக்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என, ஆட்சியர் அரவிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.