மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு
கேரளாவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவில் நடை, மகர விளக்கு பூஜைக்காக திறக்கப்பட்டது.;
கேரளா மாநிலம் பதனந்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில், இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜை பிரசித்தி பெற்றது. இந்த காலகட்டத்தில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து இருமுடி கட்டி சபரிமலை வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
அதன்படி இந்த வருடம் மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 16 ஆம் தேதி சபரிமலை நடை திறக்கப்பட்டு கடந்த 26 ஆம் தேதி மண்டல பூஜைகள் முடிந்து நடை அடைக்கப்பட்டது. இந்நிலையில் மகரவிளக்கு பூஜைகளுக்காக இன்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
தொடர்ந்து நாளை அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர், மேலும் நெய் அபிஷேகமும் நாளை அதிகாலை முதல் தொடங்கி தொடர்ந்து நடைபெறும். இன்று முதல் வரும் ஜனவரி 20 ஆம் தேதி வரை நடை திறந்து இருக்கும் நிலையில் ஜனவரி 19 ஆம் தேதி வரை நாள் ஒன்றுக்கு 60 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
அதன்படி வரும் பக்தர்கள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி அவசியம் என்றும் தேவைப்படும் பக்தர்களுக்கு ஆர்.சி.பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயம் என்றும் திருவாங்கூர் தேவசம் போர்டு அறிவித்து உள்ளது.