சோதனை சாவடி போலீசாரை நடுங்க வைத்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள்
குமரியில் சோதனை சாவடி போலீசாரை நடுங்க வைத்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள்
தமிழகத்தின் நெல்லை , தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கனரக வாகனங்கள் மூலம் கொண்டுவரப்படும் கற்கள், பாறைபொடி உள்ளிட்ட கனிமவளங்கள் குமரிமாவட்ட சோதனை சாவடிகளில் உள்ள போலீசாருக்கு லஞ்சம் கொடுத்து விட்டு சர்வ சாதாரணமாக கேரளாவிற்கு அனுமதியின்றி கடத்தப்பட்டு வருகிறது.
இதே போன்று அரிசி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட ரேஷன் பொருட்களும் கேரளாவிற்கு கடத்தப்படுவது தொடர்கதையாக இருந்து வந்தது. கடந்த 2 மாதங்களாக கட்டுக்கடங்காமல் இருந்து வரும் கனிம வளம் கடத்தல் குறித்து போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுத்தும் சோதனை சாவடியில் உள்ள போலீசார் துணையுடன் கடத்தலானது படு ஜோராக நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஆரல்வாய்மொழி மற்றும் களியக்காவிளை சோதனை சாவடிகள் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இதில் களியக்காவிளை சோதனை சாவடியில் சிறிய சிறிய கட்டுகளாக கட்டி புதருக்குள் மறைத்து வைக்கப்பட்ட 15000 ருபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் இருந்தபோதே லஞ்சம் கொடுக்க வந்த 2 வாகன ஓட்டிகள் அதிகாரிகளை கண்டதும் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர்.
இதனை தொடர்ந்து பணியில் இருந்த இரண்டு உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை காவலர் ஒருவர் என மூன்று பேர் மீது வழக்குபதிவு செய்யபட்டுள்ளது. இதே போன்று லஞ்சம் ஒழிப்பு போலீசாரின் மற்றொரு டீம் ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் சோதனை மேற்கொண்டனர்.
இரு சோதனை சாவடிகளிலும் உயர் அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவு அடிப்படையிலேயே கனரக வாகனங்களை கண்டுகொள்வது இல்லை என போலீசார் தெரிவித்தனர், இதனை லஞ்ச ஒழிப்பு போலீசார் வீடியோ ரெகார்ட் செய்து வைத்து இருப்பதாக தெரிகிறது. லஞ்ச ஒழிப்பு போலீசாரின் வேட்டை சோதனை சாவடி போலீசாரை மட்டும் அல்லாமல் காவல் துறையின் உயர் அதிகாரிகளையும் நடுங்க செய்து உள்ளது என்பதே உண்மையாக அமைகிறது.