சாலையில் சுற்றி திரியும் தெரு நாய்களால் விபத்து : நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
குமரியில் சாலையில் சுற்றி திரியும் தெரு நாய்களால் விபத்து ஏற்படுவதைத் தடுக்க உடனடி நடவடிக்கை தேவை என வலியுறுத்தல்
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சி உட்பட பல்வேறு இடங்களில் ஏராளமான தெரு நாய்கள் சாலைகளை ஆக்கிரமித்து உலாவி வருகின்றன.பல நேரங்களில் சாலையில் குறுக்கே நாய்கள் செல்வதால், அந்த வழியாக வாகனங்களில் வரும் வாகன ஓட்டிகளுக்கு விபத்தை ஏற்படுத்தி பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
மேலும், நாய்கள் தங்களுக்குள் சண்டை போட்டு சாலையில் ஓடி வருவதாலும், சாலையில் நடந்து செல்லும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சப்தம் எழுப்பி செல்வதாலும், பல்வேறு நேரங்களில் பொதுமக்கள் அச்சத்துடன் அலறியடித்து ஓடும் நிலை ஏற்படுகின்றது. கடந்த ஆண்டு வரை மாநகராட்சி பகுதிகளில் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், தற்போது எந்த நடவடிக்கையும் இல்லாததால் நாய்களின் தொல்லை அதிகரித்திருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில், சண்டையிடும் நாய்கள் கோபத்தில் பல நேரங்களில் மனிதர்களை கடித்து வைப்பதோடு, குழந்தைகளுக்கும் அச்சுறுத்தலாகி வருகிறது. எனவே மாநகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுத்து தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.