செசீலியஸ் தீவில் குமரி மீனவர்கள் 33 பேர் கைது

குமரியை சேர்ந்த 33 மீனவர்கள் செசீலியஸ் தீவில் கைது செய்யப்பட்ட நிலையில் மீனவ கிராமங்களில் பெரும் சோகம் ஏற்பட்டு உள்ளது.;

Update: 2022-03-10 15:00 GMT

கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்வதோடு 15 முதல் 60 நாட்கள் ஆழ்கடலில் தங்கி இருந்து மீன்பிடித்து வருவது வழக்கம்.

அதன்படி கன்னியாகுமரி மாவட்டம் பூத்துறை, தூத்தூர் மற்றும் சின்னத்துறை ஆகிய 3 மீனவ கிராமங்களை சேர்ந்த 33 மீனவர்கள் குக்ளின், சுனில், ஜெனிஷ் ஆகியோருக்கு சொந்தமான இன்பேன்ட் ஜீஸஸ், டொணோ, ஸ்நாபக அருளப்பர் என்ற படகுகளில் கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் 22 ம் தேதி ஆள்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

படகுகளில் முறையே 11, 10, 12 என 33 மீனவர்கள் மீன்பிடிக்க சென்ற நிலையில் அவர்கள் செலீசியஸ் எல்லை பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த போது அந்த பகுதியில் பலத்த காற்று வீசியுள்ளது. இதில் படகுகள் திசைமாறி செலீசியஸ் எல்லை பகுதிக்குள் சென்றதாக தெரிகிறது. இந்நிலையில் செலீசியஸ் எல்லை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட அந்நாட்டு கடற்படையினர் கடந்த 7 ம் தேதி படகுகளை சிறைப்பிடித்து சென்றுள்ளனர். தொடர்ந்து படகில் இருந்த கேப்டன்களை மட்டும் காவல்நிலையம் கொண்டு சென்று மீதமுள்ள மீனவர்கள் 30 பேரையும் அவர்களது விசைப்படகுகளிலியே தங்க வைத்துள்ளனர்.

இதனிடையே கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு உணவு குடிநீர் மருத்துவ வசதி போன்ற எந்த வசதிகளும் கிடைக்காத நிலையில் மீனவர்கள் கைது குறித்த தகவல் அவர்களின் உறவினர்களுக்கு கிடைத்தது, இதனால் 3 மீனவ கிராமங்களிலும் பெரும் சோகம் ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே கைது செய்யப்பட்ட மீனவர்களையும் சேர்த்து இது வரை 58 மீனவர்கள் செலீசியஸ் நாட்டில் பரிதவித்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசும் மாநில அரசும் மீனவர்களை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News