கேரளாவிற்கு கடத்த முயன்ற 3000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: அதிகாரிகள் அதிரடி
குமரியில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 3000 கிலோ ரேஷன் அரிசியை கடத்தல் வாகனத்துடன் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
விளவங்கோடு வட்டவழங்கல் அதிகாரி புரந்தரதாஸ் தலைமையில் வருவாய் ஆய்வாளர் மைக்கேல் சுந்தர்ராஜ் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழு மார்த்தாண்டம் அருகே சாங்கை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக வந்த டெம்போவை நிறுத்துமாறு அதிகாரிகள் சைகை காட்டி நிறுத்த முயன்ற நிலையில் நிறுத்துவது போல் வந்த டெம்போ அதிவேகத்துடன் சென்று விட்டது.
இதனை தொடர்ந்து அந்த டெம்போவை சுமார் 3 கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்று மார்த்தாண்டம் அருகே பழைய பாலம் பகுதியில் வைத்து அதிகாரிகள் மடக்கி பிடித்தனர். டெம்போவை நிறுத்தி விட்டு ஓட்டுநர் தப்பி ஓடிய நிலையில் டெம்போவை சோதனை செய்து பார்த்த போது சுமார் 3000 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் இந்த ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்தி செல்வதும் தெரிய வந்தது. தொடர்ந்து டெம்போவில் இருந்து கைப்பற்றப்பட்ட அரிசியை காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கில் ஒப்படைத்த அதிகாரிகள் கடத்தல் டெம்போவை வட்டாட்சியர் அலுவலகம் கொண்டு சென்றனர். மேலும் கடத்தலில் ஈடுபட்டவர் மற்றும் தப்பி ஓடிய ஓட்டுநர் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.