திருடிய பைக்கை கொண்டு செல்லும் போது விபத்து - இரண்டு திருடர்கள் கைது.
குமரியில் திருடிய பைக்கை கொண்டு செல்லும் போது விபத்தில் சிக்கிய இரண்டு திருடர்கள் கைது செய்யப்பட்டனர்.;
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே, எரும்பு காடு பகுதியைச் சேர்ந்தவர் அய்யாதுரை. இவர் அப்பகுதியில் சாலையோரமாக தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு நண்பரோடு பேசிக் கொண்டிருந்தார். சிறிது நேரத்திற்குப் பின்பு, தனது வாகனத்தை பார்த்தபோது இருசக்கர வாகனம் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே, வெள்ளமடம் பகுதியில் 2 வாலிபர்கள் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது இருவரும் இருசக்கர வாகனத்தை திருடி தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கியது தெரிய வந்தது. இதில் ஒருவர் தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரைப்பட்டி பகுதியைச் சேர்ந்த சுடலை எந்த சுரேஷ் என்பதும் மற்றொருவர் சிறு மண்டபம் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பதும் தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், விபத்தில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.