மொழிப்போர் தியாகி சிதம்பரநாதன் நினைவு நாள்: அரசு சார்பில் மரியாதை
குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைய அரும் தொண்டாற்றிய மொழிப்போர் தியாகி சிதம்பர நாதனுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
திருவிதாங்கூர் சமஸ்தானமாக குமரி மாவட்டம் இருந்தபோது தமிழ் மொழி பேசும் மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டதால் குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைக்க மொழிப்போர் போராட்டமாக மாறியது. இந்த போராட்டத்தில் கேரளா காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தியாகிகள் பலர் உயிரிழந்தனர்.
இந்த போராட்டத்தை வழிநடத்திய தியாகிகளில் ஒருவரான சிதம்பரநாதன் காலம் மாறினாலும் நினைவுகள் மாறாத ஒருவராக திகழ்ந்தார். அவரின் தியாகத்தை போற்றும் வகையில் அவரது நினைவாக கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை பேரூராட்சி வளாகத்தில் திருவுருவச் சிலை அமைக்கப் பட்டுள்ளது.
அந்த சிலையில் தியாகி சிதம்பரநாதனது 52 வது நினைவு நாளையொட்டி அவரது திருவுருவ சிலையில் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் அலர்மேல் மங்கை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜான் ஜெகத் பிரைட், வட்டாட்சியர் விஜயலக்ஷ்மி, செயல் அலுவலர் ரமா தேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.