அகழ்வாராய்ச்சிகள் மூலம் தமிழர்களின் பாரம்பரிய கலாசாரம் பொது மக்களுக்கு தெரியவரும்
அகழ்வாராய்ச்சிகள் மூலம் தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் பொது மக்களுக்கு தெரியவரும் என தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் தெரிவித்தார்.;
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மற்றும் இந்துக் கல்லூரியில் இன்று உலக தொல்லியல் தின விழிப்புணர்வு கருத்தரங்க நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சிகள் மூலம் அகழ்வாராய்ச்சிகள் மற்றும் தமிழர்களின் வரலாறு ,புதையுண்ட கிராமங்கள் பற்றிய தகவல்களை மாணவ மாணவிகள் அறிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த இந்திய தொல்லியல் துறையின் கண்காணிப்பாளர் அமர்நாத் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது "கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி மூலம் தமிழர்களின் வரலாறு பற்றிய ஆதாரங்கள் கிடைத்து வருகின்றன. இன்னும் தோண்ட தோண்ட தமிழர்களின் முழுமையான வாழ்விடம் மற்றும் கிராமங்கள் பற்றி தெரியவரும்.வைகை ஆற்றங்கரை, துலுக்கர்பட்டி, வெம்பக்கோட்டை, சிவகளை போன்ற இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
மேலும் தமிழகத்தில் இதுபோன்று பல்வேறு பகுதிகளில் அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்படுவதன் மூலம் ஏராளமான பழங்காலப் பொருள்கள் மற்றும் தமிழர்களின் அடையாளங்கள் தெரியவரும் என்று கூறினார்.மேலும் உலக மரபுச் சின்னங்கள் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் உலக மரபு தினம் கொண்டாடப்படுகிறது.அகழ்வாராய்ச்சி குறித்த விழிப்புணர்வு மாணவ மாணவிகளுக்கு ஏற்படுத்தும் விதமாக இன்று கருத்தரங்கு நடைபெற்றதாகவும், குமரி மாவட்டத்தில் உள்ள பழைய சின்னங்கள், கோயில்களை பாதுகாக்க வேண்டிய நடவடிக்கை தமிழக அரசு எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.