சர்ச்சை பாதிரியாருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்
குமரி சர்ச்சை பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா நீதிமன்ற உத்தரவுபடி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய பங்கு தந்தை ஜார்ஜ் பொன்னையா, இந்துக்கள், இந்து கோவில்கள் இந்து மத நம்பிக்கைகள் குறித்தும் நாகர்கோவில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர் காந்தி குறித்தும் பாரத பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்தும் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் இந்து இயக்கங்கள் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் பங்கு தந்தை ஜார்ஜ் பொன்னையா மீது போலீசார் 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த பொன்னையாவை மதுரையில் வைத்து இன்று போலீசார் கைது செய்தனர்.
பின்னர், கன்னியாகுமரி மாவட்டம் அழைத்து வரப்பட்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவிற்கு மருத்துவ பரிசோதனைகளை முடித்த போலீசார் அவரை குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
ஜார்ஜ் பொன்னாயாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க குழித்துறை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செல்வம் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து, அவர் பாளையங்கோட்டையில் உள்ள சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.