நிரந்தர பாலம் அமைக்க கோரிக்கை: அதிகாரியை முற்றுகையிட்ட பொதுமக்கள்
குமரியில் காட்டாற்று வெள்ளத்தில் பாலம் அடித்து செல்லப்பட்ட நிலையில் நிரந்தர பாலம் அமைக்க கோரிக்கை.;
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், ஆரல்வாய்மொழி, மார்த்தாண்டம் உட்பட மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. மாவட்டத்தின் மலையோர பகுதிகளிலும் கனமழை தொடர்ந்து நீடித்து வருவதால் மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு 1, சிற்றாறு 2 உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கீரிப்பாறை பகுதியில் மேற்கு தொடர்ச்சிமலை பகுதியில் இருந்து பெருஞ்சாணி அணைக்கு செல்லும் நீர் ஓடு பாதையில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தின் காரணமாக நீர் ஓடு பாதையின் குறுக்கே அமைந்துள்ள தற்காலிக பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் அரசு ரப்பர் கழக குடியிருப்பு பகுதியில் வசிக்கும் 350 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பெரும் பாதிப்பை சந்தித்து உள்ளனர்.
இதனிடையே பாலம் சேதம் அடைந்ததை ஆய்வு செய்ய வந்த தாசில்தார் தங்களால் ஒன்றும் செய்ய முடியாது ரிப்போர்ட் கொடுப்பது மட்டுமே தனது பணி என கூறியதால் அவரை முற்றுகையிட்ட பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அதிமுக ஆட்சிக்காலத்தில் நிரந்தர பாலத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், நிரந்தர பாலம் அமைக்க அரசு ஏன் தயக்கம் காட்டுகிறது என அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது, இது குறித்து பொதுமக்கள் கூறும்போது இப்பகுதியில் ஐந்து முறைக்கு மேலாக பாலம் காட்டாற்று வெள்ளத்தில் சேதம் அடைந்ததை தொடர்ந்து கடந்த அதிமுக ஆட்சியில் நிரந்தர பாலம் அமைக்க தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
நிதி ஒதுக்கீடு செய்தும் இந்த பால பணிகளை தற்போதைய அரசு செய்யாமல் காலம் கடத்தியதால் தான் தற்போது பாலம் சேதம் அடைந்துள்ளது. இப்போதும் இந்தப் பாலத்தை தற்காலிகமாக சீரமைக்க அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். எங்களுக்கு தற்காலிக பாலம் தேவை இல்லை நிரந்தர பாலம் மட்டுமே தேவை, ஒதுக்கீடு செய்யப்பட்ட பணத்தை கொண்டு நிரந்தர பாலம் அமைக்க வேண்டும் தற்காலிக பாலம் அமைக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்தனர்.