விளம்பர போர்டில் பிரதமர் படம் நிராகரிப்பு: பாஜக, திமுகவினர் கடும் வாக்குவாதம்
குமரியில் தடுப்பூசி வாகன விளம்பர போர்டில் பிரதமர் படம் இல்லாதது தொடர்பாக பஜகவினரும் திமுகவினரும் கடும் வாக்குவாதம் செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் 52 வார்டுகளிலும் 52 ஆட்டோக்கள் மூலமாக நடமாடும் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. இதற்காக பயன்படுத்தப்படும் ஆட்டோக்களில் வைக்கப்பட்ட விளம்பர போர்டில் திமுக தலைவர்கள் படம் மட்டுமே இடம் பெற்றிருந்தது.
இந்நிலையில் மத்திய அரசின் திட்டமான இலவச கொரோனா தடுப்பூசி திட்டத்தை தங்களுக்கு சாதகமாக்கி திமுக விளம்பரம் தேடுவதாக கூறியும், பிரதமர் படம் இடம் பெறவில்லை என்றால் விளம்பரத்தை அகற்ற வேண்டும் என கூறி அந்த ஆட்டோக்களை பாஜகவினர் வழிமறித்தனர்.
பிரதமர் படம் இல்லை என்றால் எந்த படமும் வைக்கக்கூடாது என கூறினர். இந்நிலையில் சம்பவ இடம் வந்த திமுகவினர் தங்கள் தலைவர்கள் படம் மட்டும்தான் இடம்பெறும் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது, மேலும் பாஜக மற்றும் திமுகவினர் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இந்நிலையில் சம்பவ இடம் வந்த கோட்டார் காவல்துறையினர் இருதரப்பினரையும் சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர்.