குமரியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் ராமன்புதூரில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ராமன்புதூர் ஊரில் உள்ள கோல்டன் தெருவில் தனியார் செல்போன் நிறுவனம் டவர் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்தது.
இதனை அங்கிருந்து அப்புறப்படுத்த கோரி பொதுமக்கள் கடந்த நான்கு மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனை தொடர்ந்து இந்த இடத்தில் செல்போன் டவர் அமையாது என கூறப்பட்டு வந்த நிலையில் திடீரென டவர் அமைக்கும் பணி தீவிரமாக நடந்தது. இதனை தொடர்ந்து இப்பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட ஏராளமானோர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் எனினும் நீண்ட நேரம் போராட்டம் தொடர்ந்தது.
இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறும்போது, ஏற்கனவே இந்த பகுதியில் புற்றுநோய் தாக்கம் அதிகமாக இருக்கும் வேளையில் இதேபோன்று செல்போன் டவர்கள் வீட்டின் அருகே அமைவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிப்புக்குள்ளாவார்கள் என்று தெரிவித்தனர். பொது மக்களின் போராட்டத்தை அடுத்து செல்போன் டவர் அமைக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்ட நிலையில் மீண்டும் பணியை தொடங்கினால் போராட்டம் தீவிரமாக இருக்கும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.