5 மாதங்களுக்கு பிறகு பத்மநாபபுரம் அரண்மனை திறப்பு: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
குமரியில் பண்டைய திருவாங்கூர் சமஸ்தான அரண்மனை 5 மாதங்களுக்கு பின்னர் மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது.
நாடு முழுவதும் கொரானா நோய்தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கம் காரணமாக அனைத்து சுற்றுலா தலங்கள் மற்றும் தொல்பொருள் அருங்காட்சியகம் ஆகியவை கடந்த ஏப்ரல் மாதம் முதல் மூடப்பட்டது.
இந்நிலையில் கொரானா நோய் தொற்றின் தாக்கம் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் படிப்படியாக குறைந்துவரும் நிலையில் சுற்றுலா தலங்கள் மற்றும் அருங்காட்சியகங்களை கட்டுபாடுகளுடன் திறக்க மத்திய அரசு அனுமதியளித்தது. எனினும் குமரி மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களான, திற்பரப்பு அருவி உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் பொதுமக்கள் நலன் கருதி திறப்பது நிறுத்தி வைக்கப்பட்டது.
இதே போன்று கேரளா அரசின் கட்டுபாட்டிலுள்ள பத்மநாபபுரம் அரண்மனையும் திறக்கபடாமல் இருந்தது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் வராததால் சுற்றுலா பயணிகளை நம்பி கடை வைத்து இருந்த வியாபாரிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குரியதாக ஆகியது. இந்நிலையில் கொரோனா நோய்தொற்று குறைந்த நிலையில் கேரளா அரசின் முறையான வழிகாட்டு முறைகளை பின்பற்றி பத்மநாபபுரம் அரண்மனை இன்று முதல் சுற்றுலா பயணிகள் பார்வைக்காக திறக்கபட்டது.
இதனை தொடர்ந்து ஒரே நேரத்தில் 20 நபர்கள் அரண்மனையை பார்வையிட அனுமதி வழங்கபட்டுள்ளது, இதுபோல் இங்கு பணிபுரியும் 100க்கும் மேற்பட்ட ஊழியர்களில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே பணியில் அமர்த்தபட்டுள்ளனர். பத்மநாபபுரம் அரண்மனை இன்று திறக்கபடுவதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரண்மனை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கபட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டது.
அதேபோல் கேரளா தொல்லியல்துறை அமைச்சர் நேற்று முன்தினம் அரண்மனையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார், அதனை தொடர்ந்து திறக்கபட்ட பத்மநாபபுரம் அரண்மனைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு சானிட்டைசர் வழங்கபட்டு வெப்ப பரிசோதனை மேற்கொள்ளபட்டு அனுமதிக்கபட்டனர்.
பத்மநாபபுரம் அரண்மனை திறக்கபட்டதால் சுற்றுலா பயணிகளை நம்பி வாழும் இப்பகுதி வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர், பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து அடுத்த மாதம் 3ஆம் தேதி கேரளாவில் நடைபெறும் நவராத்திரி விழாவிற்காக சாமி சிலைகள் செல்ல இருப்பது குறிப்பிடதக்கது.