கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன் நினைவு நாள்: மாலை அணிவித்து மரியாதை
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நினைவு நாளையொட்டி நாகர்கோவிலில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் 1908 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் தேதி பிறந்தவர் என்.எஸ் கிருஷ்ணன்.
சிறு வயதில் நாடக கொட்டகைகளில் சோடா விற்கும் சிறுவனாக வேலை செய்து நாடகங்கள், வில்லுப்பாட்டு போன்ற கலைகளில் படிப்படியாக வளர்ந்து தமிழ் திரை உலகில் 1936 ஆம் ஆண்டு சதிலீலாவதி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆகி 150 க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்தும் 48 பாடல்களுக்கு மேல் சொந்தமாக பாடியும் நடித்தார்.
நகைச்சுவையுடன் கூடிய நடிப்பின் மூலம் அனைவரையும் சிரிக்கவைத்து சிந்திக்க செய்தவர், இதனால் கலைவாணர் என்ற பட்டம் பெற்று தமிழ் திரை உலகில் முடிசூடா மன்னனாக திகழ்ந்த இவர் 1957 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதி தந்து 49 ஆவது வயதில் காலமானார்.
அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் நாகர்கோவிலில் உள்ள மணிமேடை சந்திப்பில் 1972 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி அன்றைய சட்டமன்ற உறுப்பினரும் பிற்காலத்தில் தமிழகத்தில் முதலமைச்சரூமாக இருந்த எம்.ஜி.ஆர் கலைவாணருக்கு சிலை அமைத்து திறத்து வைத்தார்கள்.
நகைச்சுவையின் முடிசூடா மன்னன் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனின் 64 ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று நாகர்கோவில் மணிமேடை சந்திப்பில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.