கனமழையால் வெள்ளக்காடான குமரி - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
தொடர் கனமழையால் வெள்ளக்காடான குமரியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.;
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த வருடம் நவம்பர் மாதம் பெய்த கனமழையின் காரணமாக மாவட்டத்தின் 80 சதவீத பகுதிகள் முற்றிலுமாக பெரும் பாதிப்பை சந்தித்தது சாலைகள் சிறிய கிராமங்கள் முழுவதுமாக காட்டாற்று வெள்ளத்தில் மூழ்கின. அதன்பிறகு கடந்த 4 மாதங்களாக கடும் வெயிலின் தாக்கம் இருந்து வந்தது, இதனிடையே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் வரும் 14 ஆம் தேதி வரை தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் காற்றுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது, நாகர்கோயில், தோவாளை, இரணியல், சுசீந்திரம் உட்பட மாவட்டம் முழுவதும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கிய சிறிது நேரத்திலேயே நாகர்கோயில் மாநகரின் முக்கிய பகுதிகளான கோட்டார், பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சந்திப்பு, வேப்பமூடு சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து பாய்ந்தது. மழைநீர் தேங்கிக்கிடந்த சாலைகளில் இருசக்கர வாகனங்களும் நான்கு சக்கர வாகனங்கள் கடந்து செல்ல மிகவும் சிரமப்பட்டன. தொடர்ந்து கருமேகம் நிறைந்து காணப்படுவதால் கனமழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கனமழையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.