குமரி பாஜக போஸ்டர்களில் ஓரம் கட்டப்படும் பொன்னார்

குமரியில் பாஜக சார்பில் ஒட்டப்படும் போஸ்டர்களில் பொன். இராதாகிருஷ்ணன் படம் இல்லாதது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2021-07-19 13:30 GMT

தமிழகத்தின் மூத்த தலைவர் பொன், ராதாகிருஷ்ணன் படம் இடம் பெறாத போஸ்டர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜகவின் மூத்த தலைவராக இருந்து வருபவர் முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் பாஜக மாநிலத் தலைவராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜக சார்பில் எந்த ஒரு நிகழ்ச்சியும் இவரின் பங்கேற்பு இல்லாமல் நடைபெறாது என்ற நிலையில் குமரிமாவட்ட பாஜகவில் சர்வ வல்லமை படைத்த தலைவராக வலம் வந்தார் பொன். இராதாகிருஷ்ணன்.

கடந்த பாஜக ஆட்சியின் போது மத்திய இணை அமைச்சராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் கொண்டு வந்த மேம்பாலம், நான்கு வழி சாலைகள் உட்பட மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் குமரி மாவட்ட மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று கொடுத்தது.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மத்திய அரசு செயல்படுத்த இருந்த சரக்குப் பெட்டக வர்த்தகத் துறைமுகம் திட்டத்திற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர், பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி சரக்குப் பெட்டக மாற்று வர்த்தக துறைமுகத்தை கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைக்க பெரும் முயற்சியை பொன்.ராதாகிருஷ்ணன் மேற்கொண்டார்.

இது மீனவ கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இடம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த கன்னியாகுமரி மாவட்ட மக்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அதன்பின்னர் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல் மற்றும் பாராளுமன்ற இடைத்தேர்தலில் பொன்.ராதாகிருஷ்ணன் தோல்வியை தழுவினார்.

இதனிடையே பாஜக தொண்டர்களுக்கு மதிப்பளிக்காமல் தனது விருப்பப்படியே பல்வேறு காரியங்களை பொன்.ராதாகிருஷ்ணன் மேற்கொண்டு வருகிறார் என்ற குற்றச்சாட்டும் பாஜக தொண்டர்களிடையே இருந்து வந்தது.

இந்நிலையில் தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜக சார்பில் ஒட்டப்படும் போஸ்டர்கள் மற்றும் பிளக்ஸ் போர்டுகளில் பொன். ராதாகிருஷ்ணனின் படம் நிராகரிக்கப்பட்டு வருகிறது.

குமரி பாஜகவில் ஏற்கனவே பல்வேறு விமர்சனங்கள் இருந்துவரும் நிலையில் தற்போது அதனை உறுதி செய்யும் வகையில் போஸ்டர்களில் பொன். ராதாகிருஷ்ணன் படம் நிராகரிக்கப்பட்டு இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News