அதிமுக நிர்வாகிகளுடன் சசிகலா தொலைபேசியில் தொடர்ந்து பேசி வருவதால் அக்கட்சியில் குழப்பம் நீடித்து வருகிறது.
இதனிடையே சசிகலாவுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் தொலைபேசியில் பேசியவர்கள் என முக்கிய நிர்வாகிகள் உட்பட பலர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் சசிகலாவிற்கு எதிராக மாவட்டம் தோறும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருகிறது, அதன் தொடர்ச்சியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்டம், நகரம், ஒன்றியம் சார்பாக சசிகலாவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் அசோகன் தலைமையிலும், கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் ஜாண் தங்கம் தலைமையிலும் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் சசிகலாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.