விநாயகர் சதுர்த்தி விழா: தமிழக முதல்வருக்கு நூதன முறையில் பாஜகவினர் எதிர்ப்பு
தமிழக முதல்வருக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்து பாஜகவினர் கடிதம் அனுப்பி வைத்தனர்.;
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பாஜகவினர் தபால் அட்டை மூலமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கடிதம் அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக பாஜகவினர் கூறுகையில் தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி உட்பட பல இடங்களில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி அதிக அளவிலானோர் கும்பலாக காணப்படுகின்றனர்.
ஆனால் இந்துக்களின் பண்டிகையான விநாயகர் சதுர்த்தி விழாவை பொது விழாவாக கொண்டாட தமிழக முதல்வர் தடை விதித்துள்ளது இந்து விரோத செயல் என தெரிவித்தனர்.
மேலும் மற்ற மத பண்டிகைகளுக்கு வாழ்த்துகளை தெரிவிக்கும் தமிழக முதல்வர் உலகம் முழுவதும் உள்ள இந்துக்களின் மிக முக்கிய விழாவான விநாயகர் சதுர்த்தி விழாவிற்கும் இதுவரை வாழ்த்து தெரிவிக்கவில்லை.
தமிழக முதல்வரின் அந்த செயலுக்காக கண்டனம் தெரிவிக்கும் வேளையில் தங்களுக்கு வாழ்த்து தெரிவிக்காத முதல்வருக்கு விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்களை தெரிவிக்கும் வகையில் தபால் அட்டை அனுப்பியதாக கூறினர்.