சர்வ சாதாரணமாக வெளியே வரும் கொரோனா நோயாளிகள் - பொதுமக்கள் அச்சம்..!

கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருந்து சர்வ சாதாரணமாக வெளியேரும் கொரோனா நோயாளிகளால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Update: 2021-05-29 06:45 GMT

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து உச்சம் அடைந்து வரும் நிலையில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மட்டும் சுமார் 1000 க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருக்கும் நோயாளிகளுக்கு தரம் குறைந்த ஆரோக்கியம் இல்லாத உணவு வழங்கப்படுவதாகவும் இதன் காரணமாக தனியார் கேண்டீனில் உணவு வாங்க நினைக்கும் கொரோனா நோயாளிகளிடம் மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் இருக்கும் தனியார் காவலர்கள் பணம் பெற்று கொண்டு வெளியே செல்ல அனுமதிப்பதாகவும், அதன் படி சிகிச்சை மையத்தில் இருந்து வெளியே வரும் நோயாளிகள் அருகில் உள்ள கேண்டீனில் மற்ற நோயாளிகளின் உறவினர்களுக்கு மத்தியில் நீண்ட வரிசையில் நின்று உணவு வாங்கி செல்வதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு இருப்பதாகவும் தொடர் புகார்கள் இருந்து வந்தது.

இந்நிலையில் இது குறித்த உண்மை நிலவரத்தை தெரிந்து கொள்ள செய்தியாளர்கள் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்றனர், அப்போது கொரோனா சிகிச்சை மையமாக செயல்படும் கூடுதல் கட்டிடத்தில் இருந்து நோயாளிக்ள் வெளியே வருவதும் அங்குள்ள கேன்டீன் சென்று உணவு வாங்குவதையும் ஒளிப்பதிவு செய்தனர்.

இதனிடையே கொரோனா சிகிச்சை மையத்தில் இருந்து நோயாளிகள் வெளியே வருவதையும் உணவு வாங்குவதையும் செய்தியாளர்கள் ஒளிப்பதிவு செய்வதை கவனித்த தனியார் காவலர்கள் செய்தியாளர்களை மிரட்டியதோடு அவர்களை தாக்க முயற்சித்தனர், மேலும் அவர்களிடம் இருக்கும் கேமராக்களை பறிக்க முயன்றனர். இதனால் மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஏற்கனவே அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை மருத்துவர்கள் செவிலியர்கள் யாரும் கண்டு கொள்வது இல்லை என்றும் இதனால் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தொடர்ந்து உயிர்பலிகள் ஏற்பட்டு வருவதாக தொடர் புகார்கள் இருப்பதோடு கொரோனா சிகிச்சை பலனின்றி பலியானவர்கள் உடல்களை கொட்டும் மழையில் கவனிப்பாறின்றி போட்டு வைத்த சம்பவமும் கொரோனா சிகிச்சையில் மருத்துவமனை அலட்சியத்தால் உயிர் பிரிந்ததாக கூறி உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபடும் சம்பவங்களும் அரங்கேறின.

இந்நிலையில் தற்போது உள்ள சம்பவம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொரோனா பரவலை தடுக்காமல் அதனை வளர்க்க உதவுகிறது என்பதால் அரசு இது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து அலட்சியமாக செயல்படுவது கொரோனா தொற்று பரவலுக்கு வாய்ப்பாக அமையும் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags:    

Similar News