பாஜக ஆர்ப்பாட்டம்: பொன்.இராதாகிருஷ்ணன் உட்பட 900 பேர் மீது வழக்கு
குமரியில் விதிமுறைகளை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக, பொன். இராதாகிருஷ்ணன் உட்பட 900 பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கொரோனா பரவலை காரணம் காட்டி, தமிழகம் முழுவதும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களிலும், விநாயகர் சதுர்த்தி, மகாளய அமாவாசை உள்ளிட்ட விஷேச நாட்களிலும், கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய மற்றும் வழிபாடுகள் செய்ய தமிழக அரசு தடை விதித்தது.
மேலும், கோவில்களில் பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட நகைகளை உருக்குவதாக அரசு அறிவித்தது. இதனிடையே தமிழக அரசு, இந்துக்களின் வழிபாட்டு உரிமையை தடுப்பதாகவும், சுவாமி நகைகளை உருக்குவதன் மூலம் ஆகம விதிகளை மீறுவதாகவும் குற்றம்சாட்டி, நேற்று தமிழகம் முழுவதும் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்படி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், முன்னாள் மத்திய இணை அமைச்சரும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான பொன். இராதாகிருஷ்ணன் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனிடையே, கொரோனா விதிமுறைகளை மீறியதாக, பொன். இராதாகிருஷ்ணன் உட்பட பாஜகவை சேர்ந்த 900 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.