2 மாதத்தில் 60 ஆயிரம் வழக்கு: விரட்டி பிடிக்கும் போலீசார்-தெறித்து ஓடும் வாகன ஓட்டிகள்
குமரியில் ஹெல்மட் அணியாதவர்களை விரட்டி பிடிக்கும் போலீசார், 2 மாதத்தில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது வழக்கு.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறி அதிவேகமாகவும், பாதுகாப்பு இன்றியும் செல்வதால் விபத்துகள் ஏற்படுவது அதிகரித்து வந்தது.
இதனை தடுக்கும் வகையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி செல்லும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் விதி மீறலை கண்காணிக்கவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டார்.
அதன் படி மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொள்ளும் போலீசார் விதிமீறலில் ஈடுபடும் வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதனிடையே மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்திய வாகன சோதனையில் தலைக்கவசம் இன்றி வாகனம் ஓட்டுதல், உரிய ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டுதல், அதிவேகம், விதி மீறல் போன்ற பல்வேறு காரணங்களால் ஒரே நாளில் 2258 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கடந்த 2 மாதங்களில் மட்டும் மாவட்டத்தில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.