அதிமுக கூட்டணியில் கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதி யாருக்கு என்ற கேள்விக்கு விடை தெரியாமல் கூட்டணி கட்சியினர் தவித்து வருகின்றனர்.
பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதியில் பாஜக மற்றும் அதிமுக செல்வாக்குடன் இருக்கும் தொகுதியாக பார்க்கப்படும் நிலையில் மாவட்டத்தில் ஏற்கனவே 3 தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டு உள்ள நிலையில் பத்மநாபபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளரை நிறுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழகத்திலுள்ள அனைத்து தொகுதிகளிலும் கூட்டணி பங்கீடு முடிந்த நிலையில் அதிமுகவும் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
இந்நிலையில் இதுவரை பத்மநாபபுரம் தொகுதிக்கு மட்டும் அதிமுக கூட்டணியில் எந்தக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பது தெரியாததால் கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கும் நிலையில் பத்மநாபபுரம் தொகுதி எந்த கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது, வேட்பாளர் யார் என்பது கூட அறிவிக்கப்படாத சம்பவம் அதிமுக கூட்டணியை மட்டுமல்லாது அனைத்துக்கட்சி வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.