நாகர்கோவிலில் டிராவல்ஸ் உரிமையாளரிடம் பண மோசடி செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் பகுதியை சேர்ந்தவர் ரகுமான் (27). டிராவல்ஸ் நடத்தி வரும் இவர் விமான டிக்கெட் மற்றும் ரயில் டிக்கெட்டுகள் புக்கிங் செய்து கொடுப்பது வழக்கம்.இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், இவரை தொடர்பு கொண்ட திருப்பூர் பகுதியை சேர்ந்த பர்கத் அலி (29) என்பவர் தன்னை டாக்டர் என கூறி அறிமுகம் செய்ததோடு அமெரிக்கா செல்ல வேண்டி இருப்பதால் டிக்கெட் புக்கிங் செய்யும்படியும், நாகர்கோவிலில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு வரும் போது பணத்தை தந்து, டிக்கட்டை பெற்றுக் கொள்வதாகவும் கூறினார். பின்னர் தொடர்ந்து அடிக்கடி போனில் பேசிய பர்கத் அலி, தனக்கு ரூ.40 ஆயிரம் அவசரமாக தேவைப்படுவதாகவும், தனது அக்கவுண்ட் நம்பருக்கு பணத்தை அனுப்பி வைத்தால், டிக்கெட் கட்டணத்துடன் அதையும் சேர்ந்து தந்து விடுவதாகவும் கூறி உள்ளார்.
இதனை நம்பிய பர்கத் அலி அனுப்பிய வங்கி கணக்கிற்கு, ரகுமான் ரூ.40 ஆயிரம் பணம் அனுப்பியதாக கூறப்படுகிறது. ஆனால் அதன் பின்னர், பர்கத் அலி, ரகுமானை தொடர்பு கொள்ளவில்லை. அவரது போன் நம்பர் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அதன் பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரகுமான், இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கன்னியாகுமரியில் உள்ள ஒர்க்ஷாப் ஒன்றில் காரில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய வந்த நபரின் மீது சந்தேகம் அடைந்த சிலர் கன்னியாகுமரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
கன்னியாகுமரி போலீசார் இது குறித்து விசாரித்த போது தான், அந்த நபர் பர்கத் அலி என்பது தெரிய வந்தது. உடனடியாக வடசேரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.சப் இன்ஸ்பெக்டர் சத்யசோபன் தலைமையில் போலீசார் சென்று, பர்கத் அலியை கைது செய்தனர். மேலும் காரையும் பறிமுதல் செய்தனர். அவரிடம் இருந்து ஆதார் கார்டு, பான்கார்டு ஆகியவை கைப்பற்றப்பட்டன. அவை அனைத்தும் போலியானது என கூறப்படுகிறது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. கைது செய்யப்பட்ட பர்கத்அலி ஏற்கனவே வழிபறி வழக்கில் சம்பந்தபட்டவர் எனவும் தெரிய வந்துள்ளது.