கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை 550 இடங்களில் தடுப்பூசி முகாம்
குமரியில் நாளை 550 தடுப்பூசி முகாம் மூலம் 1 லட்சத்து 12 ஆயிரம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளன.;
கொரோனா இல்லாத மாவட்டமாக கன்னியாகுமரி மாவட்டத்தை உருவாக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மாவட்ட நிர்வாகம், மாநில அரசின் உத்தரவுப்படி சனிக்கிழமைதோறும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தி வருகிறது.
அதன்படி நாளை சனிக்கிழமை கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் 550 இடங்களில் இந்த தடுப்பூசி முகாம் நடைபெறுகின்றது. இதற்காக ஒரு லட்சத்து 12 ஆயிரம் தடுப்பூசிகள் தயார் நிலையில் உள்ளன, தடுப்பூசியை செலுத்தும் வகையில் 300 மருத்துவ பணியாளர்களும் தயார்நிலை படுத்தப்பட்டுள்ளனர்.
மாவட்டம் முழுவதும் தடுப்பூசி செலுத்துவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மாவட்ட நிர்வாகம் மெகா தடுப்பூசி முகாம் மூலம் தடுப்பு ஊசி செலுத்துபவர்களில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் 22 நபர்களுக்கு தங்க நாணயம் பரிசளிக்கப்படும் என்ற கவர்ச்சிகரமான திட்டத்தை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.