முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை பழிவாங்குவது அல்ல - அமைச்சர் மனோ தங்கராஜ்
முன்னாள் அமைச்சர்களுக்கு சொந்தமான நடைபெறும் சோதனை பழிவாங்கும் நடவடிக்கை இல்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தேசிய வங்கிகள் மற்றும் வரையறுக்கப்பட்ட வங்கிகள் சார்பில் சுய உதவி குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் வைத்து நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பயனாளிகளுக்கு கடனுக்கான காசோலைகளை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் மேற்கொள்ளப்படும் சோதனைகள் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு மடியில் கனமில்லை என்றால் அச்சப்பட வேண்டிய தேவையில்லை எனவும், அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்தால் சோதனை நடைபெறும் எனவும் தெரிவித்தார். அதன் அடிப்படையில் நடைபெற்ற சோதனைதான் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இடங்களில் சோதனையே தவிர வேறு எந்த அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையும் இல்லை எனவும் கூறினார்.
வரி ஏய்ப்பு செய்பவர்கள் எந்த துறையை சார்ந்தவர்கள் என்றாலும் நிச்சயமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், அது சம்பந்தப்பட்ட துறையின் பணி எனவும் கூறினார். மேலும் தவறு செய்யாதவர்கள் எந்த சோதனையை கண்டும் அச்சப்பட வேண்டிய தேவை இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.